டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலியை முந்தினார் ஸ்டீவன் சுமித்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித், விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறினார்.
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலியை முந்தினார் ஸ்டீவன் சுமித்
Published on

துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் புதிய உச்சத்தை தொட்டுள்ளார். கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 238 ரன்கள் குவித்ததன் மூலம் 29 புள்ளிகளை கூடுதலாக பெற்ற அவர் மொத்தம் 919 புள்ளிகளுடன் கம்பீரமாக நம்பர் ஒன் அரியணையில் தொடருகிறார். நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் ஒரு வீரரின் அதிகபட்ச புள்ளி எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு இதே வில்லியம்சன் 2018-ம் ஆண்டில் 915 புள்ளிகள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தனது முந்தைய சாதனையை அவர் மாற்றி அமைத்துள்ளார். நியூசிலாந்து வீரர்களில் வில்லியம்சனை தவிர்த்து ரிச்சர்ட் ஹாட்லீ மட்டும் 900 புள்ளிகளை (1985-ம் ஆண்டில் 909 புள்ளி) கடந்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்டில் 131, 81 ரன்கள் வீதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் அதற்குரிய பலனாக 23 புள்ளிகளை சேகரித்து மொத்தம் 900 புள்ளிகளுடன் 3-ல் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாதியிலேயே விலகிய இந்திய கேப்டன் விராட் கோலி சிட்னி டெஸ்டை தவறவிட்டதற்காக 9 புள்ளியை இழந்ததுடன் 870 புள்ளிகளுடன் 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கோலியை வெகுவாக நெருங்கிவிட்ட ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் 866 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நீடிக்கிறார்.

சிட்னி டெஸ்டில் இரு இன்னிங்சிலும் அரைசதம் (50, 77 ரன்) அடித்த இந்திய வீரர் புஜாரா 2 இடம் ஏற்றமும் (8-வது இடம்), இதே டெஸ்டில் தடுமாறிய இந்திய பொறுப்பு கேப்டன் அஜிங்யா ரஹானே ஒரு இடமும் (7-வது இடம்), துணை கேப்டன் ரோகித் சர்மா 2 இடமும் (17-வது இடம்) சரிந்துள்ளனர். ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7-ல் இருந்து 10-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார்.

சிட்னி டெஸ்டில் பெரும் போராட்டத்துடன் கணிசமான பங்களிப்பை அளித்து இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய வீரர்களான ரிஷாப் பண்ட் 26-வது இடமும் (19 இடம் ஏற்றம்), ஹனுமா விஹாரி 51-வது இடமும் (2 இடம் அதிகரிப்பு), சுப்மான் கில் 68-வது இடமும் (8 இடம் முன்னேற்றம்) அஸ்வின் 89-வது இடமும் (2 இடம் உயர்வு) வகிக்கிறார்கள்.

டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-4 இடங்களில் மாற்றம் இல்லை. முதல் 4 இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (908 புள்ளி), இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (845), நியூசிலாந்தின் நீல் வாக்னர்(825), டிம் சவுதி (811) ஆகியோர் தொடருகிறார்கள். இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 3 இடம் முன்னேறி 805 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார். அதே சமயம் இந்திய பவுலர்கள் அஸ்வின் 2 இடமும் (9-வது இடம்), ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடமும் (10-வது இடம்) சரிந்துள்ளனர்.

ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் ஏற்றத்துடன் 2-வது இடத்தை பெற்றுள்ளார். ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) 3-வது இடத்திலும், ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்) 4-வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் தொடரில் அசத்திய நியூசிலாந்தின் கைல் ஜாமிசன் 5 இடங்கள் எகிறி 5-வது இடத்துக்கு வந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com