

லண்டன்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்காக ஆடிய போது தோள்பட்டையில் காயமடைந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருந்தார். அவர் 60 சதவீதம் மட்டுமே உடல்தகுதியுடன் இருப்பதாகவும் உலக கோப்பை போட்டிக்குள் குணமடைந்து விடுவார் என்றும் அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு தோள்பட்டை காயம் சரியாகவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர் உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்த உலக கோப்பையில் எந்த ஒரு ஆட்டத்திலும் ஆடாமல் ஏமாற்றத்துடன் அவர் வெளியேறி இருக்கிறார். அது மட்டுமின்றி அவர் மீண்டும் களம் திரும்ப அதிக காலம் பிடிக்கும் என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என்று கருதப்படுகிறது. 35 வயதான ஸ்டெயின் 93 டெஸ்டில் ஆடி 439 விக்கெட்டுகளும், 125 ஒரு நாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். ஸ்டெயினுக்கு பதிலாக தென்ஆப்பிரிக்க அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்சை சேர்ப்பதற்கு ஐ.சி.சி.யின் டெக்னிக்கல் குழு அனுமதி அளித்துள்ளது.