

வெல்லிங்டன்,
இந்திய ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் மூன்று நான்கு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர், நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் மற்றும் மூன்றாவது போட்டிகள் லிங்கனிலும், இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சிலும் நடைபெற உள்ளன.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி இன்று தொடங்கியது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணியின் கேப்டன் ரைஸ் மரியு பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி வெறும் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்திய பேட்ஸ்மேன்களால் நியூசிலாந்து பந்துவீச்சைச் சமாளித்து பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. அணியின் பேட்டிங் வரிசையில் 4 வீரர்கள் டக் அவுட் ஆகி வெளியேறியது பெரும் பின்னடைவாக அமைந்தது. மேலும், 4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். இதில் யஷ் ரத்தோட் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்து இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 77 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து ஏ அணியின் சைமன் கீன் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜாக் கிப்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பேட்டிங் வரிசைக்கு மேலும் அழுத்தம் கொடுத்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து ஏ அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து முதல் நாள் முடிவில் 135 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரைஸ் மரியு 76 ரன்கள் விளாசினார். கர்டிஸ் ஹீபி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து அணி 22 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியா ஏ அணியின் பந்துவீச்சில் அவ்கிப் நபி 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், முகேஷ் சௌத்ரி 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.