எஸ்.ஏ. டி20: பார்ல் ராயல்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ்

பார்ல் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது
டர்பன்,
4-வது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டிவிட்ட இந்த தொடரில் 2வது தகுதி சுற்றில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணியின் கேப்டன் டான் லாரன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கைல் வெர்ரைன் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார்.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அந்த அணியின் செனுரான் முத்துசாமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சன்ரைசர்ஸ் 11.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பார்ல் ராயல்ஸ் அணிகை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி நுழைந்தது.
இதையடுத்து கேப் டவுனில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி எதிர்கொள்ள உள்ளது.






