

ஆமதாபாத்,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்தது. சைபர்ட் 35 ரன்களும், ஆலன் 29 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களால் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியவில்லை. பிலிப்ஸ் தன் பங்குக்கு 39 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ரஷித், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
இங்கிலாந்து அணியின் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பிலிப் சால்ட் 2 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ஜோஸ் பட்லர் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய ஹேரி புரூக் 26 ரன்களும், பெத்தேல் 21 ரன்களும், சாம் கரன் 24 ரன்களும், டாம் பாண்டன் 33 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்ததாக வில் ஜாக்ஸ்சுடன், ரிஹன் அகமது ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்த இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
முடிவில் வில் ஜாக்ஸ் 32 (18) ரன்களும், ரிஹன் அகமது 19 (7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதன்படி இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றின் அனைத்து போட்டியிலும் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி உள்ளது.
அரையிறுதி சுற்று: பாகிஸ்தான் அணி தகுதி பெறுமா..?
இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டத்தட்ட மங்கி உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக, 7 ஓவர் வித்தியாசத்தில் அல்லது 60 ரன்களுக்கு கூடுதலாக எடுக்கும்பட்சத்தில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு (ரன் ரேட் அடிப்படையில்) தகுதிபெற வாய்ப்புள்ளது.