

லக்னோ,
லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 155 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியும் 155 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்றது. ஆனால், சூப்பர் ஓவரில் சுனில் நரேனின் சுழலில் சிக்கிய லக்னோ அணி வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளையும் இழந்தது. இதை கொல்கத்தா எளிதாக எட்டி வெற்றியை ருசித்தது.
இந்த தோல்விக்குப் பிறகு லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது;
”எங்களுக்கு இப்போது ஒரு சிறிய இடைவேளை தேவைப்படுகிறது. நாங்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற வேண்டும். ஐபிஎல் என்பது எப்போதுமே அதிக அழுத்தம் நிறைந்த போட்டிகளைக் கொண்டது. ஒவ்வொரு வீரரும் தங்களின் பொறுப்பை உணர வேண்டும். ஒருவரையோ அல்லது இருவரையோ மட்டும் குறை சொல்ல முடியாது. இது ஒட்டுமொத்த அணியின் தோல்வி. ஒவ்வொருவரும் தங்களது செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். தீர்வுகளை வெளியிலிருந்து தேடுவதை விட, எங்களுக்குள்ளேயே தேட வேண்டும். " எனத் தெரிவித்தார்.
சூப்பர் ஓவரில் தொடர்ந்து சொதப்பி வரும் நிக்கோலஸ் பூரனை ஏன் அனுப்பினீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பண்ட், "நாங்கள் அனைவரும் ஆலோசித்துதான் பூரனை களமிறக்க முடிவெடுத்தோம். அவர் தற்போது தனது வாழ்நாளின் சிறந்த பார்மில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நம்முடைய வீரர்களை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். அவர்கள் நிச்சயம் சிறப்பாக மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. தோல்விக்கு எந்த சாக்குப்போக்குகளையும் சொல்ல விரும்பவில்லை" என்றார்.