நாக்பூர் டெஸ்ட்: வித்தியாசமான சாதனை படைத்த சூர்யகுமார்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது.
image corutesy: BCCI twitter
image corutesy: BCCI twitter
Published on

நாக்பூர்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது.

'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தேனீர் இடைவெளிக்கு பின்னர் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 24 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 56 ரன்களுடனும் (69 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட அஸ்வின் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

நாக்பூர் போட்டியின் மூலம் சூர்யகுமார் யாதவ் இந்தியாவின் 304-வது டெஸ்ட் வீரராகவும், விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் இந்தியாவின் 305-வது டெஸ்ட் வீரராகவும் அறிமுகம் ஆனார்கள். இதில் ஆந்திராவைச் சேர்ந்த பரத்துக்கு ஒட்டுமொத்தத்தில் இது தான் முதலாவது சர்வதேச போட்டியாகும். இதே போல் ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பி 465-வது டெஸ்ட் வீரராக சர்வதேச பயணத்தை தொடங்கினார்.

இவர்களில் சூர்யகுமார் யாதவுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. அவர் 2021-ம் ஆண்டில் முதல்முறையாக சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன போது அவரது வயது 30 ஆண்டு 181 நாட்கள். தனது முதலாவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய போது வயது 30 ஆண்டு 307 நாட்கள். இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் கால்பதித்த போது, வயது 32 ஆண்டு 148 நாட்கள். இதன் மூலம் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 30 வயதை கடந்த பிறகு அறிமுகம் ஆன முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com