சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடி... இலங்கை-ஏக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா-ஏ

அதிகபட்சமாக சூர்யான்ஷ் ஷெட்ஜ் 72(66) ரன்கள் எடுத்தார்.
சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடி... இலங்கை-ஏக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா-ஏ
Published on

தம்புல்லா,

இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஏ, இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்த தொடரில் இந்தியா-ஏ அணியை திலக் வர்மா வழிநடத்தி வருகிறார்.

முதல் போட்டியில் இலங்கை-ஏ அணியை வீழ்த்திய இந்தியா-ஏ, இரண்டாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-ஏ அணியிடம் டிஎல்எஸ் முறையில் தோல்வி கண்டது. இந்த நிலையில் இன்று இலங்கை-ஏ அணியுடன் இந்தியா-ஏ அணி மோதி வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை-ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா-ஏ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் 11 (13), வைபவ் சூர்யவன்சி 21 (14) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ருதுராஜ் - திலக் கூட்டணி நீடிக்கவில்லை

அதன்பின்னர் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கேப்டன் திலக் வர்மா அணியின் இன்னிங்ஸை சீரமைக்க முயன்றனர். இருவரும் ஓரளவு நிலைத்து நின்று விளையாடிய நிலையில், ருதுராஜ் 37 (42) ரன்களிலும், திலக் வர்மா 23 (32) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஆயுஸ் பதோனி 15 (35), நிஷாந்த் சிந்து 6 (12), அனுகுல் ராய் 8 (27) ரன்களில் வெளியேறியதால் இந்தியா-ஏ அணி மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.

சூர்யான்ஷ் - விப்ராஜ் ஜோடி அணியை மீட்டது

அணி சரிவை சந்தித்த நேரத்தில் சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் விப்ராஜ் நிகம் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். சூர்யான்ஷ் ஷெட்ஜ் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் விப்ராஜ் நிகமும் தனது அரைசதத்தை பதிவு செய்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப் இந்தியா-ஏ அணியை போட்டிக்குள் மீண்டும் கொண்டு வந்தது. இதையடுத்து வந்த அர்ஷத் கான் 2(2) ரன்களிலும் சிறப்பாக ஆடிய சூர்யான்ஷ் ஷெட்ஜ் கடைசி ஓவரின் 2-வது பந்தில் 72(66) ரன்களிலும் அவுட்டாகினர்.

இலங்கை-ஏ அணிக்கு 266 ரன்கள் வெற்றி இலக்கு

இதனால் இந்தியா-ஏ அணி 49.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யான்ஷ் ஷெட்ஜ் 72(66) ரன்கள் எடுத்தார். இலங்கை-ஏ அணி தரப்பில் விஜயகாந்த் வியஸ்காந்த் மற்றும் முகமது ஷிராஸ் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை-ஏ அணி தனது இன்னிங்ஸை தொடங்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com