சூர்யவன்ஷி, துருவ் ஜுரேல் அதிரடி... ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 எடுத்தது.
சூர்யவன்ஷி, துருவ் ஜுரேல் அதிரடி... ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Published on

கவுகாத்தி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இதனிடையே மழை காரணமாக போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, மழை நின்ற பிறகு போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி பெங்களுரு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் முதல் பந்திலேயே கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் விராட் கோலி, 32 ரன்கள் எடுத்த நிலையில், ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் போல்ட் ஆனார். க்ருணால் பாண்டியா 1 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் ரஜத் படிதார் தனது அபாரமான ஆட்டத்தால் அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். அவர் 35 பந்துகளில் அரைசதம் கடந்த படிதார், 40 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.

இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர், 15 பந்துகளில் 29 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால்-சூர்யவன்ஷி களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் சூர்யவன்ஷியுடன் துருவ் ஜுரேல் களமிறங்கினார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. இதில் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

தொடர்ந்து 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை விளாசிய சூர்யவன்ஷி, 26 பந்துகளில் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துருவ் ஜுரேல் 43 பந்துகளில் 81 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com