

லண்டன்
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், பார் தி லப் ஆப் கிரிக்கெட் என்ற பெயரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் தென்ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரரான ஏ.பி. டி வில்லியர்சை பேட்டி கண்டார்.
அப்போது அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல். அணியின் இளம் வீரரான 15 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷியை பற்றி குறிப்பிட்டு பேசினார். சூர்யவன்ஷி, இந்த வயதில் திறமையாக விளையாடுவது வியக்கத்தக்க அளவில் உள்ளது. ஆனால், அவர் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். அதிலும், கிரிக்கெட்டின் நீண்ட வடிவான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என தன்னுடைய விருப்பங்களை கூறினார்.
அவருக்காக என்னென்ன காத்திருக்கின்றன என்பது அப்போது தெரியும். அதனால், கிரிக்கெட்டின் அந்த வடிவத்திலும் அவர் விளையாட வேண்டும். அவருக்குள்ளே இருக்கும் திறமைகளை அவர் கண்டறிய வேண்டும். எனினும், அது ஒரு கடினம் வாய்ந்த பாதையாக இருக்கும். ஆனால், தன்னுடைய வழியில் குறுக்கே வரும் அனைத்து தடைகளையும் தகர்த்து முன்னேறி செல்லும் திறமை நிச்சயம் அவருக்கு உள்ளது.
அவர் அந்த பாதையில் பயணித்து, அவருடைய நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முயற்சிப்பார் என்று நம்புகிறேன் என்று கூறினார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் சூர்யவன்ஷி 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 2 அரை சதங்களுடன் 440 ரன்களை எடுத்துள்ளார்.