டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை படைத்த அஸ்மதுல்லா உமர்சாய்

ஹாங்காக் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் உமர்சாய் இந்த சாதனையை படைத்தார்.
அபுதாபி,
8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 73 ரன்களும், அஸ்மதுல்லா உமர்சாய் 53 ரன்களும் அடித்தனர். ஹாங்காங் தரப்பில் ஆயுஷ் சுக்லா மற்றும் கின்சித் ஷா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதில் அஸ்மதுல்லா உமர்சாய் வெறும் 20 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் என்ற மாபெரும் சாதனையை அஸ்மதுல்லா உமர்சாய் படைத்துள்ளார்.
பின்னர் 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 94 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பாபர் ஹயாத் 39 ரன்கள் அடித்தார். பரூக்கி, குல்படின் நைப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.






