டி20 கிரிக்கெட்: 46 வயதில் 5 விக்கெட்... உலக சாதனை படைத்த இம்ரான் தாஹிர்

image courtesy:PTI
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அணியின் கேப்டனாக இம்ரான் தாஹிர் உள்ளார்.
ஆன்டிகுவா,
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற (இந்திய நேரப்படி) 9-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்சை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்களும், ஹெட்மேயர் 65 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆன்டிகுவா அணி இம்ரான் தாஹிரின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது. வெறும் 15.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்ஸ் 128 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆன்டிகுவா தரப்பில் கரிமா கோர் 31 ரன்கள் அடித்தார். கயானா தரப்பில் அற்புதமாக பந்துவீசிய கேப்டன் இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய கேப்டன் என்ற உலக சாதனையை இம்ரான் தாஹிர் (46 வயது 148 நாட்கள்) படைத்துள்ளார். இதற்கு முன்னர் மலாவி கேப்டன் மொவாசம் அலி பெய்க் தனது 39 வயதில் கேமரூனுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்துள்ள இம்ரான் தாஹிர் புதிய சாதனை படைத்துள்ளார்.






