20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா


தினத்தந்தி 19 Dec 2025 11:20 PM IST (Updated: 19 Dec 2025 11:38 PM IST)
t-max-icont-min-icon

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 201 ரன்கள் எடுத்துள்ளது.

ஆமதாபாத்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் காயத்தால் அவதிப்படும் சுப்மன் கில் ஆகியோருக்கு பதிலாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டனர். தென் ஆப்பிரிக்க அணியில் ஒரே மாற்றமாக நோர்ட்ஜே நீக்கப்பட்டு ஜார்ஜ் லிண்டே சேர்க்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - சுப்மன் கில் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவர்களில் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் (21 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மா களமிறங்கினார்.

மறுமுனையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட சஞ்சு சாம்சன் தனது பங்குக்கு 37 ரன்கள் (22 பந்துகள்) அடித்த நிலையில் போல்டானார். பின்னர் வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் (5 ரன்) இந்த முறையும் சொதப்பினார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா - திலக் வர்மா கூட்டணி சிறப்பாக ஆடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது. குறிப்பாக இந்த ஜோடியில் ஹர்திக் பாண்ட்யா சிக்சருக்கும் பவுண்டரிக்கும் பந்துகளை தெறிக்க விட்டார். மறுமுனையில் திலக் வர்மாவும் தனது பங்குக்கு அதிரடி காட்ட இந்திய அணி இமாலய ரன் குவிப்பை நோக்கி சென்றது.

இந்த ஜோடியில் திலக் வர்மா முதலில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 16 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் வெறும் 26 பந்துகளில் 63 ரன்கள் அடித்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஹர்திக் - திலக் கூட்டணி 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த ஷிவம் துபே சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு பறக்க விட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. ஷிவம் துபே 10 ரன்களுடனும், ஜிதேஷ் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். திலக் வர்மா 73 ரன்களில் ரன் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குயின்டன் டி காக் (65) ஹென்ட்ரிக்ஸ் (13) ஆட்டமிழந்ததும், அடுத்து விளையாடியவர்களும் குறைந்த ரன்களில் வெளியேறினர். பிரெவிஸ் (31), டேவிட் மில்லர் (18), எய்டன் மார்க்ரம் (6), பெரேரா (0) லிண்டே (16), மார்கோ (14) ரன்களில் ஆட்டமிழந்தனர். கார்பின் (17), லுங்கி நிகிடி (7) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 201 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளும், பும்ரா 2விக்கெட்டுகளும், பாண்ட்யா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இதனால், தென்ஆப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் ஏற்கனவே முன்னிலை வகித்த நிலையில், இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

1 More update

Next Story