டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை படைத்த இந்திய அணி


டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை படைத்த இந்திய அணி
x
தினத்தந்தி 27 Sept 2025 6:40 AM IST (Updated: 27 Sept 2025 7:04 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த சூப்பர்4 சுற்றின் 6-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 107 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 பந்தில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்தியா முதல் பந்திலேயே 3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிரான இந்தியா வெற்றி பெறுவது இது 23-வது முறையாகும். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு எதிரணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற 2-வது அணி என்ற மாபெரும் சாதனையை நியூசிலாந்துடன் (பாகிஸ்தானுக்கு எதிராக) இந்தியா பகிர்ந்துள்ளது. இதில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக 24 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

1 More update

Next Story