டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நேபாளம்

கோப்புப்படம்
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடக்கிறது.
சார்ஜா,
வெஸ்ட் இண்டீஸ் - நேபாளம் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் நேபாளம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்தது. நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 68 ரன்னும், சந்தீப் ஜோரா 63 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அஹேல் ஹொசைன், கைல் மேயர்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நேபாள வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 90 ரன் வித்தியாசத்தில் நேபாளம் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என நேபாளம் கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடக்கிறது.






