ரச்சின் ரவீந்திரா அபாரம்: நியூசிலாந்து வெற்றி - அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

சூப்பர் 8 சுற்றுபோட்டியில் இலங்கை அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.
ரச்சின் ரவீந்திரா அபாரம்:  நியூசிலாந்து வெற்றி - அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை
Published on

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கேப்டன் சான்ட்னர் சிறப்பாக விளையாடி 47 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 32 ரன்களும், பின் ஆலன் 23 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 168 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீக்சனா, சமீரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இலங்கை அணியின் சார்பில் நிசாங்கா மற்றும் குசால் மெண்டீஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் நிசாங்கா (0) ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அசலங்கா 5 ரன்னும், மெண்டீஸ் 11 ரன்னும், ரத்னாயகா 10 ரன்னும், கேப்டன் தசுன் ஷனகா 3 ரன்னும், ஹெமந்தா 3 ரன்னும், ஒரளவு தாக்குப்பிடித்து ஆடிய கமிந்து மெண்டீஸ் 31 ரன்களும், வெல்லாலகே 29 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

முடிவில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்மூலம் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுபோட்டியில் இலங்கை அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. இதனிடையே இந்த தோல்வியின் மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. இது அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com