டி20 கிரிக்கெட்: புதிய வரலாறு படைத்த சூர்யகுமார் யாதவ்

பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது சூர்யகுமார் யாதவ் இந்த சாதனையை படைத்தார்.
ஜெய்ப்பூர்,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப்சிங், மார்கோ ஜான்சன், விஜய்குமார் வைசாக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து 185 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 73 ரன்கள் அடித்தார்.
நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் களம் இறங்கிய 14 ஆட்டங்களிலும் குறைந்தது 25 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து அதிக முறை 25 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவின் பவுமா தொடர்ந்து 13 ஆட்டங்களில் 25 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள சூர்யகுமார் யாதவ் புதிய வரலாறு படைத்துள்ளார்.






