இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி தேர்வை விமர்சித்த முன்னாள் வீரர்

இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக இந்த தொடரில் இந்திய அணி ஒரு முழு நேர வேகப்பந்து வீச்சாளருடன் 4 சுழற்பந்து வீச்சாளர்களை (ஸ்பின்னர்கள்) பிளேயிங் லெவனில் சேர்த்து விளையாடி வருகிறது. கூடுதல் வேகப்பது வீச்சாளராக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் இது மிகவும் தவறான அணி தேர்வு என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ஏனெனில் ஸ்பின்னர்களை வைத்தே 16 ஓவர்கள் வீச முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உங்களுக்கு 4 ஸ்பின்னர்கள் தேவை என்று நீங்கள் சொல்லலாம். நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்களால் 16 ஓவர்கள் ஸ்பின்னர்களை வைத்தே வீச முடியுமா?. அதை உங்களால் சரியாக செய்ய முடியாது. கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு நீங்கள் ஒரு ஓவர் மட்டுமே கொடுத்தீர்கள். ஆனால் வெறும் ஒரு ஓவருக்காக நீங்கள் ஒரு வீரரை விளையாட வைப்பது வேடிக்கையான விஷயம்.
அந்த வகையில் நாம் சரியான அணியை தேர்ந்தெடுத்தோமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அர்ஷ்தீப் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் விளையாடினார்கள். பின்னர் ஷமி விளையாடிய போதும் பாண்ட்யா அவருடன் இருந்தார். இந்திய அணியில் போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்று அர்த்தமில்லை. நீங்கள் அவர்களை விளையாட வைக்க விரும்பவில்லை" என்று கூறினார்.






