டி20 உலகக்கோப்பை; ரோகித், கோலியை தேர்வு செய்யாவிட்டால் அது மிகப்பெரிய தவறு - வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர்

அழுத்தமான பெரிய தருணங்களில் அசத்துவதற்கு உங்களுக்கு அனுபவ வீரர்கள் தேவை.
டி20 உலகக்கோப்பை; ரோகித், கோலியை தேர்வு செய்யாவிட்டால் அது மிகப்பெரிய தவறு - வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர்
Published on

பார்படாஸ்,

ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் தொடருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் தேர்வாகியுள்ள ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் தேர்வு செய்யப்படாதது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

அதிலும் 2022 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 அணியில் இடம்பெறவில்லை. இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் ஆகியோரை தேர்வு செய்யவில்லை என்றால் அது இந்தியா செய்யப்போகும் மிகப்பெரிய தவறான முடிவாக இருக்கும் என வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அதிரடி வீரர் ரசல் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "முதலில் விராட் மற்றும் ரோகித் குறித்து ஏன் இவ்வளவு பெரிதாக பேசப்படுகிறது என்பது எனக்கு தெரியவில்லை. இப்போதுள்ள சமூக வலைதளங்கள் வீரர்களின் திறமையை கேள்வி கேட்கும் இடமாக இருக்கிறது. ரோகித் சர்மா கொண்டுள்ள அனுபவத்திற்கும் விராட் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதற்கும் அவர்களை உலகக்கோப்பையில் இந்தியா தேர்வு செய்யாமல் போனால் அது தவறான முடிவாக இருக்கும்.

உலகக்கோப்பையில் எப்போதுமே அனுபவம் தேவை. அங்கே நீங்கள் 11 இளம் வீரர்களை அனுப்ப முடியாது. மாறாக அனுபவம் மிக்கவர்களை அனுப்ப வேண்டும். அதே சமயம் இளம் வீரர்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அழுத்தமான பெரிய தருணங்களில் அசத்துவதற்கு உங்களுக்கு அனுபவ வீரர்கள் தேவை" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com