

அபுதாபி,
டி20 உலகக் கோப்பை தொடரில் அபுதாபியில் நடைபெறும் 27-வது போட்டியில், குரூப்-2 பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான்-நமீபியா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரதுல்லா ஷாஸாய் மற்றும் முகமது ஷாஸாத் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி நமீபியாவின் பந்துவீச்சை சிதற அடித்தது. இதனால் பவர்-பிளே ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்தது. இந்த ஜோடியில் ஹஸ்ரதுல்லா ஷாஸாய் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய குர்பாஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின், களமிறங்கிய அஸ்கர் ஆப்கன் மைதானத்துக்குள் நுழைந்ததும், நமீபிய அணி வீரர்கள் இருபுறமும் வரிசையாக நின்று கைதட்டி வரவேற்பு அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். தனது கடைசி டி20 போட்டியில் விளையாடிய அஸ்கர் ஆப்கனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சம்பவம் அமைந்தது.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய முகமது ஷாஸாத் 33 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்கர் ஆப்கன் 23 பந்துகளை எதிர்கொண்டு 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முடிவில் கேப்டன் முகமது நபி 32(17) ரன்களும், நைப் 1 (1) ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. நமீபியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ரூபென் ட்ரம்பெல்மாண் மற்றும் ஜான் நிக்கோல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 161 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா அணி களமிறங்க உள்ளது.