டி20 உலகக்கோப்பை: தொடர் நாயகன் விருது யாருக்கு? - பட்லர், பாபர் ஆசமின் பதில்...!

டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் யார் என்பதற்கு ஜோஸ் பட்லரும், பாபர் ஆசமும் அவர்களது கருத்தை கூறியுள்ளனர்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் நடப்பு டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பட்டியல் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஐசிசி பரிந்துரைத்துள்ள வீரர்களிள் யார் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அந்த வீரர் ஐசிசி தொடர் நாயகன் விருது வெல்வார். அந்த வகையில் ஐசிசி தொடர்நாயகன் விருதுக்கு ஐந்து நாடுகளில் இருந்து 9 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதில் நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்துள்ள விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் சதாப் கான், ஷாகின் ஆப்ரிடி, இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஷாம் கரண், கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹெல்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களை தவிர ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா, இலங்கை வீரர் ஹசரங்கா ஆகியோரும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள்.

ஐசிசி-யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று ரசிகர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். இறுதி போட்டி முடிந்த பிறகு சாம்பியன் கோப்பை வழங்குவதற்கு முன்னதாக இதன் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் யார் என இறுதிப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் கேப்டடன் ஜோச் பட்லரும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமும் தேர்வு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜோஸ் பட்லர் கூறும்போது,

என்னை பொறுத்தவரை தொடர் நாயகனாக சூர்ய குமார் யாதவை தேர்வு செய்வேன். சூர்யகுமார் யாதவ் மிகவும் சுதந்திரமாக விளையாடினார். கோலி, ரோகித் போன்றோர் அணியில் இருக்கும் போது இவர் ஆடிய விதத்தை பார்த்தது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அவர் ஒரு அற்புதமான வீரர் என்றார்.

மேலும், சாம் கரன் மற்றும் அலெக்ஸ் ஹேலஸ் ஆகியோரும் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்கள். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினால் அவர்களுக்கும் தொடர் நாயகன் விருதை வெல்ல வாய்ப்பு உள்ளது.

தொடர் நாயகன் விருது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் கூறும்போது,

ஷதாப் ஆடும் விதத்தை பார்க்கும் போது அவர் தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என நினைக்கிறேன். அவரது பந்து வீச்சு மிகச்சிறப்பாக உள்ளது, அவரது பேட்டிங் விதம் மேம்பட்டுள்ளது. கடைசி 3 போட்டிகளில் அவரது சிறப்பான ஆட்டமும், அவரது சிறந்த பீல்டிங்கும் அவரை தொடர் நாயகன் விருதுக்கான பட்டியலில் முக்கிய வீரராக இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com