தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எந்தவொரு ஊழலையும் சகித்துக்கொள்ளாது; தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் -புதிய தலைவர் ரூபா குருநாத்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எந்தவொரு ஊழலையும் சகித்துக்கொள்ளாது. இவ்விகாரங்களில் கண்டிப்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட ரூபா குருநாத் கூறி உள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எந்தவொரு ஊழலையும் சகித்துக்கொள்ளாது; தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் -புதிய தலைவர் ரூபா குருநாத்
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன் அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான 87-வது பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவரும் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவருமான சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவர்களாக சீனிவாச ராஜ், அசோக் சிகாமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் ரூபா குருநாத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். கோல்ஃப் வீராங்கனையான ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராவார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள ரூபா குருநாத், செயலாளர் ராமசாமி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட வரலாறு மற்றும் சிறந்த நபர்களின் தலைமையில் தொழில் ரீதியாக இயங்கும் சங்கமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இருந்து வருகிறது. அரசாங்கத்துடனான குத்தகை ஒப்பந்தத்தை இறுதி செய்து மூன்று பார்வையாளர்கள் மாடங்களை திறப்பதே என்னுடைய உடனடி முன்னுரிமையாக உள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எந்தவொரு ஊழலையும் சகித்துக்கொள்ளாது. இவ்விகாரங்களில் கண்டிப்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வீரர்கள் தங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் வேறு எந்த தேவைகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்று கூறியுள்ளார்.

செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறி உள்ளதாவது:-

முதல் முறையாக மாவட்டங்களில் இருந்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுகக்ப்பட்டுள்ளதற்கு நான் மிகவும் பெருமையடைகிறேன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது, கடந்த காலங்களில் புகழ்பெற்ற உறுப்பினர்களால் நடத்தப்பட்ட ஒரு அலுவலகமாகும். எனவே, எனது முன்னோடிகளால் நிர்ணயிக்கப்பட்ட தரங்களை பின்பற்ற நான் முயற்சிப்பேன். விளையாட்டு மற்றும் வீரர்களின் முன்னேற்றத்திற்காக எங்களது புதிய தலைவரின் கீழ் நாங்கள் பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com