விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் ஆந்திர அணியிடம் தமிழகம் தோல்வி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் ஆந்திர அணியிடம் தமிழக அணி தோல்வியடைந்தது.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் ஆந்திர அணியிடம் தமிழகம் தோல்வி
Published on

இந்தூர்,

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தூர், பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தூரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-ஆந்திரா (பி பிரிவு) அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஆந்திர அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த தமிழக அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. 41.3 ஓவர்களில் தமிழக அணி 176 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 40 ரன்னும், சோனு யாதவ் 37 ரன்னும் எடுத்தனர். என்.ஜெகதீசன் (11 ரன்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (7 ரன்), ஷாருக்கான் (19 ரன்) உள்பட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஆந்திர அணி தரப்பில் ஸ்டீபன், சோயிப் முகமது கான் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

இதனை அடுத்து ஆடிய ஆந்திர அணி 29.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் அஸ்வின் ஹெப்பர் 101 ரன்னும், விக்கெட் கீப்பர் ரிக்கி புய் 52 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். தமிழக அணி தரப்பில் சிலம்பரசன் 2 விக்கெட்டும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி இருந்த தமிழக அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். ஆந்திர அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

பெங்களூருவில் நடந்த சி பிரிவு ஆட்டம் ஒன்றில் கேரளா-உத்தரபிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி 49.4 ஓவர்களில் 283 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கேரள அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் 5 விக்கெட்டுகள் அள்ளினார். பின்னர் ஆடிய கேரள அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராபின் உத்தப்பா 81 ரன்னும், கேப்டன் சச்சின் பேபி 76 ரன்னும் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com