லார்ட்ஸ் அருங்காட்சியகத்தில் டெண்டுல்கர் உருவப்படம்

Image Courtesy: @BCCI / @ICC
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது.
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி 'கிரிக்கெட்டின் தாயகம்' என அழைக்கப்படும் லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. போட்டி தொடங்குவதன் அடையாளமாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மைதானத்தில் உள்ள மணியை அடித்தார். லார்ட்சில் மணியோசை நிகழ்ச்சியில் டெண்டுல்கர் பங்கேற்றது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக டெண்டுல்கரை கவுரவிக்கும் விதமாக அவரது உருவப்படம் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் உள்ள எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது. 18 ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை, ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ஓவியமாக வரைந்துள்ளார்.
இந்த படம் ஆண்டு இறுதிவரை அருங்காட்சியகத்தில் இருக்கும். அதன் பிறகு பெவிலியனுக்கு மாற்றப்படும். இதே பியர்சன், இதற்கு முன்பு கபில்தேவ், பிஷன் சிங் பேடி, வெங்சர்க்கார் ஆகியோரது படங்களையும் வரைந்துள்ளார்.
தனது ஓவியத்தை பார்வையிட்ட தெண்டுல்கர் கூறுகையில், இது மிகப்பெரிய கவுரவம். 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது, லார்ட்ஸ் மைதானம் பற்றி முதல்முறையாக அறிந்தேன். இங்கு, நமது கேப்டன் கபில்தேவ் உலகக் கோப்பையை தூக்கிபிடிப்பதை பார்த்தேன். அந்த தருணம் தான் எனது கிரிக்கெட் பயணத்துக்கு துளிர்விட்டது. தற்போது அதே மைதானத்தில் எனது புகைப்படமும் இருப்பது மிகவும் சிறப்பானது. இவ்வாறு அவர் கூறினார்.






