தெண்டுல்கரின் இரண்டு வித்தியாசமான கவலை

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரும், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரருமான இந்திய முன்னாள் வீரர் 48 வயதான சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
தெண்டுல்கரின் இரண்டு வித்தியாசமான கவலை
Published on

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு வருத்தங்கள் உண்டு. இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கருடன் இணைந்து நான் ஒரு போதும் விளையாடியதில்லை. இளம் வயதில் அவர் தான் எனது பேட்டிங் ஹீரோ. நான் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிப்பதற்கு 2 ஆண்டுக்கு முன்பாக அவர் ஓய்வு பெற்று விட்டார். இதனால் அணியில் ஒரு வீரராக அவருடன் இணைந்து ஆடவில்லையே என்ற ஏக்கம் எப்போதும் உண்டு.

எனக்குள் இருக்கும் இன்னொரு வருத்தம் என்னவென்றால் எனது சிறுவயது நாயகன் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்சுக்கு எதிராக விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனது தான். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதிராக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறேன். ஆனால் சர்வதேச களத்தில் அவரை எதிர்த்து விளையாட முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இன்னும் உண்டு. இத்தனைக்கும் நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்து தான் விவியன் ரிச்சர்ட்ஸ் (1991-ம் ஆண்டில்) ஓய்வு பெற்றார். ஆனால் சில ஆண்டுகள் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளாததால் அவரை களத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமல் போய் விட்டது.

இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com