

நியூ சண்டிகார்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலத்தின் நியூ சண்டிகாரில் நேற்று தொடங்கியது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் அறிமுக வீரராக இடம் பெற்றார்.
இந்தியாவின் இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் தொடங்கினர். இருவரும் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில், 41 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கி ராகுலுடன் இணைந்து அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட இருவரும் வேகமாக ரன்கள் சேர்த்தனர். சாய் சுதர்சன் தனது மூன்றாவது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்த நிலையில், 81 ரன்களில் (104 பந்துகள், 13 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் தனது 12-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 165 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த அவர், சதம் அடித்த உடனேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பிறகு கேப்டன் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இணைந்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் ஆதிக்கம் செலுத்தினர். நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடிய கில் தனது 11-வது டெஸ்ட் சதத்தை எட்டினார். மறுபுறம் ரிஷப் பண்ட் அரைசதம் கடந்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 103 ரன்களுடனும் (143 பந்துகள், 11 பவுண்டரிகள், 1 சிக்சர்), ரிஷப் பண்ட் 50 ரன்களுடனும் (70 பந்துகள், 2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) களத்தில் இருந்தனர்.
மிகவும் வலுவான நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் 126 ரன்களில் அவுட்டானார். பின்னர் பண்டுடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரெல் நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பர்க்கப்பட்டநிலையில், 19(20) ரன்களில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். அப்போது அதிரடியாக ஆடி கொண்டிருந்த பண்ட் 81(121) ரன்களில் அவுட்டானார்.
இதையடுத்து புதிய பேட்ஸ்மேன்கள் வாஷிங்டன் சுந்தர் - மானவ் சுதார் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். உணவு இடைவேளையில் இந்திய அணி 475/6 ரன்கள் எடுத்தது. இடைவேளைக்கு பின் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 114 ஓவர்களில் 500 ரன்களை கடந்தது. அப்போது நிதானமாக ஆடி வந்த மானவ் சுதார் 28(41) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த சிராஜ் அதிரடியில் இறங்கினார். 120-வது ஓவரில் 2 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக ஆட நினைத்த அவர் 22(12) ரன்களில் அவுட்டானார். இதையடுத்து குல்தீப் யாதவ் களமிறங்கினார். தொடர்ந்து நிதானமாக அடி வந்த வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்தார்
அப்போது அணி 564/8 ரன்கள் எடுத்திருந்தநிலையில், இந்தியா முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. வாஷிங்டன் சுந்தர் 52(68) ரன்களுடனும், குல்தீப் 9(26) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் சலிம் சாபி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து ஆபகானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை துவங்க உள்ளது.