

புளோம்பாண்டீன்,
முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டீன் எல்கர் (113 ரன்), எய்டன் மார்க்ராம் (143 ரன்) சதம் அடித்தனர். தொடக்க நாளில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 428 ரன்கள் எடுத்திருந்தது. அம்லா (89 ரன்), கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (62 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம் தொடர்ந்தது. அம்லா 28-வது சதத்தையும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 7-வது சதத்தையும் பூர்த்தி செய்தனர். தென்ஆப்பிரிக்க வீரர்களில் அதிக சதங்கள் அடித்த சாதனையாளர்களின் பட்டியலில் கிரேமி சுமித்தை (27 சதம்) பின்னுக்கு தள்ளிவிட்டு 2-வது இடத்துக்கு அம்லா முன்னேறினார். இந்த வகையில் காலிஸ் 45 சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார். அம்லா 132 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 573 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பாப் டு பிளிஸ்சிஸ் (135 ரன்), குயின்டான் டி காக் (28 ரன்) அவுட் ஆகாமல் இருந்தனர்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 42.5 ஓவர்களில் 147 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் ரபடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.