இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் அவர் போர்க்குதிரை போன்ற வீரர் - அஸ்வின்

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. சமீபத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அத்துடன் இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் போர்க்குதிரை போன்று செயல்படக்கூடிய ஒரு வீரர் என்று பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடும்போது, சிறந்த பந்துவீச்சு தாக்குதல் போட்டிகளில் வெற்றி பெறும். ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்கும்போது குல்தீப் யாதவ் நிச்சயம் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதேபோன்று ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா இருவரும் பந்துவீச்சில் முன்னிலையில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த தொடரை பொறுத்தவரை ஜடேஜா நல்ல கட்டுப்பாட்டை கொடுக்கக்கூடிய வீரராக இருக்கிறார். ஏனெனில் அவரால் சிறப்பாக பந்துவீசவும் முடியும், பேட்டிங்கில் பெரியளவு பங்களிப்பினை வழங்கவும் முடியும் அது நமக்கு கூடுதல் பலம். இந்த பந்துவீச்சு தாக்குதல் எந்த பேட்டிங் வரிசையையும் எந்த சூழ்நிலையிலும் வீழ்த்த முடியும். முகமது சிராஜை நாம் மறந்துவிடக் கூடாது, அவர் ஒரு போர்க்குதிரை போன்றவர்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com