

சென்னை,
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க வீரர் ரோகித் சர்மா அபாராமாக ஆடினார். ஆனால் மறு முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் குவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய 2- ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது. எனினும், அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார். ஆனால், மறு முனையில் யாரும் நிலைத்து நிற்காததால் இந்திய அணி 95.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் பேட் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது. இறுதியைல் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 195 ரன்களுடன் முன்னிலையில் இருந்தது.
அதனையடுத்து அடுத்து தனது 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சுப்மன் கில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் புஜரா ஜோடி சேர்ந்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா 25 ரன்களும், புஜாரா 7 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இதன்படி இந்திய அணி, இங்கிலாந்து அணியை விட 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை நடைபெறும் 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்பட்சத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிராக மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.