இந்தியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலியா ஏ 242 ரன்கள் முன்னிலை

கோப்புப்படம்
இந்தியா ஏ தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 75 ரன் எடுத்தார்.
லக்னோ,
ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் (அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள்) போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய 'ஏ' அணி கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் திடீரென விலகினார். இதனால் துருவ் ஜுரெல் கேப்டனாக நியமிக்கப்பட்டார் . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜாக் எட்வர்ட்ஸ் 88 ரன்கள், நாதன் மெக்ஸ்வீனி 74 ரன்கள் , சாம் கான்ஸ்டாஸ் 49 ரன்கள் எடுத்தனர்.இந்தியா தரப்பில் மனவ் சுதர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி தனது முதல் இன்னிங்சில் 420 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய ஏ அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 75 ரன் எடுத்தார்.
ஆஸ்திரேலியா ஏ தரப்பில் தோர்ன்டன் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 226 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 16 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய ஏ இதுவரை 242 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.






