இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஜோ ரூட் சதத்தால் சரிவை சமாளித்தது இங்கிலாந்து

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து அணி சரிவை சமாளித்தது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஜோ ரூட் சதத்தால் சரிவை சமாளித்தது இங்கிலாந்து
Published on

பல்லகெலே,

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 290 ரன்களும், இலங்கை 336 ரன்களும் எடுத்தன. இந்த நிலையில் 46 ரன்கள் பின்தங்கிய நிலையில் 3-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்கத்தில் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். திடீரென தொடக்க வரிசையில் இறக்கப்பட்ட ஜாக் லீச் (1 ரன்), ஜென்னிங்ஸ் (26 ரன்), ரோரி பர்ன்ஸ் (59 ரன்), பென் ஸ்டோக்ஸ் (0) உள்ளிட்டோர் இலங்கையின் சுழல்வலையில் சிக்கினர். அப்போது இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 109 ரன்களுடன் பரிதவித்தது.

இந்த சூழலில் கேப்டன் ஜோ ரூட் நிலைத்து நின்று ஆடி அணிக்கு வலுவூட்டி னார். சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளித்த அவருக்கு ஜோஸ் பட்லர் (34 ரன்), விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் நன்கு ஒத்துழைப்பு தந்தனர். இதனால் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டு கவுரவமான நிலைக்கு வந்தது. துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்திய ஜோ ரூட் பவுண்டரி அடித்து தனது 15-வது சதத்தை எட்டினார். வெளிநாட்டு மண்ணில் அவரது 4-வது சதமாகும்.

அபாரமாக ஆடிய ஜோ ரூட் 124 ரன்களில் (146 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) அகிலா தனஞ்ஜெயாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 76 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்ததால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

பென் போக்ஸ் (51 ரன், 102 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜேம்ஸ் ஆண்டர்சன் (4 ரன்) களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஆனாலும் அவர் 23 ஓவர்களில் ஒரு மெய்டன் கூட வீசாமல் 106 ரன்களையும் வாரி வழங்கினார்.

இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி இதுவரை 278 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்றைய 4-வது நாள் ஆட்டம் 15 நிமிடங்களுக்கு முன்பாக காலை 9.45 மணிக்கு தொடங்கும். இங்கிலாந்தின் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருப்பதால், சிறிது நேரத்தில் இலக்கை நிர்ணயித்து விடும். வருண பகவான் குறுக்கீடு இல்லா விட்டால் இன்றைய நாளில் மொத்தம் 98 ஓவர்கள் வீசப்படும். யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை கணிக்க முடியாத நிலைமை உருவாகி இருப்பதால், இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com