ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் வங்காளதேசம் முன்னிலை

ஜிம்பாப்வே - வங்காளதேசம் முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
image courtesy:twitter/@ICC
image courtesy:twitter/@ICC
Published on

சில்ஹெட்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 56 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே தரப்பில் வெல்லிங்டன் மசகட்சா மற்றும் முசரபானி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 82 ரன்கள் முன்னிலை பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 59 ரன்களும், பிரையன் பென்னெட் 57 ரன்களும் அடித்தனர். வங்காளதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 82 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் அடித்திருந்தது. மஹ்முதுல் ஹசன் ஜாய் 28 ரன்களுடனும், மொமினுல் ஹக் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வங்காளதேசம் 25 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. மழை காரணமாக தாமதாக தொடங்கிய இன்றைய நாளில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் சிறப்பாக பேட்டிங் செய்தது. ஹசன் ஜாய் 33 ரன்களிலும், மொமினுல் ஹக் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்சன் சாண்டோ நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தார். இதன் மூலம் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் முன்னிலை பெற்றது.

3-வது நாள் முடிவில் வங்காளதேசம் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் அடித்துள்ளது. சாண்டோ 60 ரன்களுடனும், ஜேக்கர் அலி 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வங்காளதேச அணி இதுவரை 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com