டெஸ்ட் கிரிக்கெட்: முதல் ஆசிய பவுலராக வரலாறு படைத்த பும்ரா


டெஸ்ட் கிரிக்கெட்: முதல் ஆசிய பவுலராக வரலாறு படைத்த பும்ரா
x

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா இந்த சாதனையை படைத்தார்.

லீட்ஸ்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரது செஞ்சுரியால் முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து 'சேனா' நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பும்ரா இதுவரை 150 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் 'சேனா'நாடுகளில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

அடுத்து 6 ரன் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், 2-வது விக்கெட்டுக்கு வந்த தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. லோகேஷ் ராகுல் (47 ரன்), கேப்டன் சுப்மன் கில் (6 ரன்) களத்தில் நிற்கிறார்கள். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

1 More update

Next Story