டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த இந்தியா

image courtesy:ICC
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா சார்பில் 12 சதங்கள் பதிவாகியுள்ளன.
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்னும், இங்கிலாந்து அணி 247 ரன்னும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், 'நைட் வாட்ச் மேனாக' இறங்கிய ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 88 ஓவர்களில் 396 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 118 ரன்களும், ஆகாஷ் தீப் 66 ரன்களும், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த இன்னிங்சில் ஜெய்ஸ்வால் அடித்த சதத்தையும் சேர்த்து நடப்பு தொடரில் இந்திய அணி தரப்பில் 12 சதங்கள் அடிக்கபட்டுள்ளன. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சதம் அடித்த அணிகளின் மாபெரும் சாதனை பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா 12 சதங்கள் அடித்திருந்தன. தற்போது அந்த அணிகளின் சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது.
பின்னர் இலக்கை நோக்கி தனது 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் அடித்துள்ளது. ஜாக் கிராவ்லி 14 ரன்னில் முகமது சிராஜ் பந்து வீச்சில் போல்டானார். பென் டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






