டெஸ்ட் கிரிக்கெட்: பேட்டிங்கில் அல்ல... ராகுல் டிராவிட்டின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இந்த சாதனையை படைத்தார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

லீட்ஸ்,

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல் ராகுல் 47 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 96 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆகி மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியா தரப்பில் கே.எல்.ராகுல் 137 ரன்களும்,பண்ட் 118 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு, பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராவ்லி 12 ரன்னுடனும், பென் டக்கெட் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஜோ ரூட் மொத்தம் 2 கேட்சுகள் பிடித்தார். இதனையும் சேர்த்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை ஜோ ரூட் 210 கேட்சுகள் பிடித்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் (விக்கெட் கீப்பர் தவிர) என்ற ராகுல் டிராவிட்டின் மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. ஜோ ரூட்/ராகுல் டிராவிட் - 210 கேட்சுகள்

2.ஜெயவர்த்தனே - 205 கேட்சுகள்

3. ஸ்டீவ் சுமித்/காலிஸ் - 200 கேட்சுகள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com