டெஸ்ட் கிரிக்கெட்: ரன்களில் மட்டுமல்ல... கவாஸ்கரின் மற்றொரு மகத்தான சாதனையையும் தகர்த்த சுப்மன் கில்


டெஸ்ட் கிரிக்கெட்: ரன்களில் மட்டுமல்ல... கவாஸ்கரின் மற்றொரு மகத்தான சாதனையையும் தகர்த்த சுப்மன் கில்
x

image courtesy:BCCI

தினத்தந்தி 7 July 2025 3:15 PM IST (Updated: 7 July 2025 3:56 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

பர்மிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 427 ரன்னில் 'டிக்ளேர்' செய்து 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி சுமித் 88 ரன்கள் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2-வது இன்னிங்சில் சதமும் விளாசிய இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது.

ரோகித் சர்மாவுக்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அதுவும் இந்தியா இதற்கு முன்னர் வெற்றியே கண்டிராத பர்மிங்காம் மைதானத்தில் இது நடந்திருப்பது கூடுதல் சிறப்பானதாகும். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில்லின் தற்போதைய வயது 25தான்.

இதன் மூலம் இந்திய அணிக்காக குறைந்த வயதில் வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியை வென்ற கேப்டன் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்பு 1976-ம் ஆண்டு சுனில் கவாஸ்கர் 26 வயதில் நியூசிலாந்தில் வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது சுனில் கவாஸ்கரின் அந்த மகத்தான சாதனையை முறியடித்துள்ள சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

1 More update

Next Story