டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு எதிராக ஜெய்ஸ்வாலின் மாபெரும் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இந்த சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு எதிராக ஜெய்ஸ்வாலின் மாபெரும் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
Published on

மும்பை,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் காய்ச்சலால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பெற்றார்.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கில் 31 ரன்களுடனும், பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா தரப்பில் கில் நிதானமாக விளையாட மறுமுனையில் பண்ட் அதிரடி ஆட்டத்தை கடைபிடித்தார். இருவரும் அரைசதம் அடித்தனர். அதிலும் பண்ட் வெறும் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற ஜெய்ஸ்வாலின் (41 பந்துகள்) மாபெரும் சாதனையை தகர்த்துள்ள பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.

தற்போது வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் அடித்துள்ளது. கில் 61 ரன்களுடனும், பண்ட் 54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com