டெஸ்ட் கிரிக்கெட்: 2022-ம் ஆண்டுக்குப்பின் முதல் இந்திய வீரராக சாதனை படைத்த சாய் சுதர்சன்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார்.
மான்செஸ்டர்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் களம் புகுந்தனர். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழல் நிலவிய போதிலும் இருவரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை திறம்பட சமாளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ராகுல் 46 ரன்களில் கேட்ச் ஆனார்.
2-வது விக்கெட்டுக்கு இறங்கிய தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் நிதானத்தை கடைபிடித்தார். மறுமுனையில் தனது 12-வது அரைசதத்தை அடித்த ஜெய்ஸ்வால் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் (12 ரன்) நிலைக்கவில்லை. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்த நிலையில் ஷாட் பிட்ச் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா (19 ரன்), ஷர்துல் தாக்குர் (19 ரன்) களத்தில் உள்ளனர். இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்காக 3-வது வரிசையில் களமிறங்கி அரைசதம் அடித்த சாய் சுதர்சன் மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2022-ம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியின் 3-ம் வரிசை பேட்ஸ்மேன்கள் யாரும் வெளிநாட்டு மண்ணில் அரைசதம் அடிக்கவில்லை. கடைசியாக 2022-ம் ஆண்டு 3-ம் வரிசையில் களமிறங்கிய புஜாரா, வங்காளதேசத்தில் இந்திய அணிக்காக அரைசதம் அடித்திருந்தார். தற்போது சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2022-ம் ஆண்டுக்குப்பின் வெளிநாட்டு மண்ணில் அரைசதம் அடித்த முதல் 3-ம் வரிசை இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.






