

செஞ்சூரியன்,
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், புற்கள் நிறைந்த இந்த ஆடுகளத்தை மனதில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா ஆரம்பத்தில் திணறியது. ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே டீன் எல்கர் (0) விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் ஆனார். டெஸ்டின் முதல் பந்திலேயே இங்கிலாந்து விக்கெட் வீழ்த்துவது 2007-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். இது ஆண்டர்சனின் 150-வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மார்க்ராம் (20 ரன்), ஜூபைர் ஹம்சா (39 ரன்), அறிமுக வீரர் வான்டெர் துஸ்சென் (6 ரன்), கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (29 ரன்) ஆகியோர் சீரான இடைவெளியில் நடையை கட்ட தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கு 111 ரன்களுடன் சிக்கலில் தவித்தது. இந்த சூழலில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் அணியை தூக்கி நிறுத்தினார். பிரிட்டோரியசின் (33 ரன்) ஒத்துழைப்புடன் அணியின் ஸ்கோரை 200 ரன்களை தாண்ட வைத்த குயின்டான் டி காக் துரதிர்ஷ்டவசமாக 95 ரன்களில் (128 பந்து, 14 பவுண்டரி) கேட்ச் ஆகிப்போனார். ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 82.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் சாம் கர்ரன் 4 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளும், ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.