

சென்னை,
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 19-வது ஐபிஎல் சீசன், வரும் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நேற்று சென்னை அணியின் ரீயூனியன் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பங்கேற்றனர். மேத்யூ ஹைடன், மைக்கேல் ஹஸ்சி, டுவெய்ன் பிராவோ, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முன்னாள் சர்வதேச வீரர்களும் கலந்து கொண்டனர்.
நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட திரைக்கலைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில், ‘சில்லுன்னு ஒரு காதல்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘முன்பே வா’ பாடலை பாடிய ஏ.ஆர். ரகுமான், இது சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று தெரிவித்தார். அதற்கு பின்னர் ஏ.ஆர். ரகுமானுடன் பேசிய சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, “முன்பே வா பாடல் எனக்குத்தான் பேவரைட்; ரெய்னாவுக்கு அல்ல” என்று நகைச்சுவையாக கூறினார். இதுதொடர்பான வீடியோவை சென்னை அணி தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.