அதனால்தான் நான் இன்னும் விளையாடி வருகிறேன் - ஸ்டார்க்

image courtesy: twitter/@IPL
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
விசாகப்பட்டினம்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 18.4 ஓவர்களில் 163 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் அபாரமாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி வெறும் 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் பாப் டு பிளேஸ்சிஸ் 50 ரன்கள் அடித்தார். ஐதராபாத் தரப்பில் சீஷன் அன்சாரி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் டெல்லி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற ஸ்டார்க் அளித்த பேட்டியில், "சன்ரைசர்ஸ் எவ்வளவு பலம் வாய்ந்த அணி என்பது நமக்கு தெரியும். இருந்தாலும் பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் அவர்களை எளிதில் சுருட்ட முடியும் என்பதை நாங்கள் அறிவோம். அந்த வகையிலேயே இந்த முதல் பாதியில் மிகச்சிறப்பாக பந்துவீசி அவர்களை சுருட்டியதில் மகிழ்ச்சி. புதிய அணிக்காக விளையாடுவது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை தந்துள்ளது.
ஏனெனில் தற்போது நான் 35 வயதை எட்டி விட்டதால் இளமையான ஒரு வீரர் கிடையாது. ஆனால் இன்னும் எனக்குள் கிரிக்கெட் எஞ்சியிருக்கிறது. தற்போது இளம் வீரர்களுடன் அமர்ந்து நிறைய பேசுகிறேன். அவர்களுக்கு என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். நான் இன்னும் என் கிரிக்கெட்டை ரசிக்கிறேன். அதன் போட்டித்தன்மையை விரும்புகிறேன். அதனால்தான் நான் இன்னும் விளையாடி வருகிறேன்" என்று கூறினார்.






