அதனால்தான் படிதாரால் கோப்பையை வெல்ல முடிந்தது - இந்திய முன்னாள் வீரர் பாராட்டு

இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

பெங்களூரு,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.

இதில் பெங்களூரு அணி நிர்ணயித்த 191 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 184 ரன்னில் அடங்கியது. ஷசாங் சிங்கின் (61 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) அதிரடி வீணானது. 2 விக்கெட் வீழ்த்திய பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பெங்களூரு அணியின் 18 ஆண்டு கால கோப்பை ஏக்கத்தை தணித்த கேப்டன் ரஜத் படிதாரை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், ரஜத் படிதாரின் குணத்தை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த ஆண்டு ரஜத் படிதாரின் கேப்டன்சி மிகவும் சுவாரசியமாக இருந்தது. சில சமயங்களில், உங்கள் அணியில் பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருக்கும்போது, அவர்களை நிர்வகிக்க முடியுமா என்று உங்கள் மனதில் சிறிது தயக்கம் இருக்கும். இருப்பினும், அவர் இந்த அணியை வளர்த்து, சூப்பர் ஸ்டார்களிடமிருந்து ஆதரவைப் பெற்ற விதத்தைப் பார்க்கும்போது, அவருக்கு தலைமைத்துவப் பண்புகள் இருப்பதை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.

அவருக்கு எந்த ஈகோவும் இல்லை. அவர் மூத்த வீரர்களிடம் சென்று என்ன செய்ய வேண்டும் என்று விவாதித்தார். அவர் கேட்ட விதத்திலிருந்தே அவருக்கு எந்த ஈகோவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஒரு கேப்டனுக்கு ஒருபோதும் ஈகோ இருக்கக்கூடாது. இப்படி அவர் ஈகோ இல்லாமல் இயல்பாக இருந்ததாலே அவரால் கோப்பையை வெல்ல முடிந்தது" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com