

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை இன்று வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில், தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில், 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனியுடன் இணைந்து விளையாடி கோப்பையை கைப்பற்றியது என் வாழ்நாளில் மறக்க முடியாத சிறந்த தருணமாகும். இந்திய கிரிக்கெட்டில் தோனியில் பங்களிப்பு மகத்தானது. அவருக்கு, அவரது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
தோனி தலைமையிலான அணி, கடந்த 2007ம் ஆண்டில் ஐ.சி.சி. உலக கோப்பை 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பின்னர் கடந்த 2010 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளிலும், கடந்த 2011ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தோனியின் ஓய்வு அறிவிப்பு அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.