இந்தியா-இலங்கை மோத இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ரத்து

இந்தியா-இலங்கை இடையே கவுகாத்தியில் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்தியா-இலங்கை மோத இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ரத்து
Published on

கவுகாத்தி,

இந்தியாவுக்கு வந்துள்ள மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா ஸ்டேடியத்தில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கி நடக்க இருந்தது.

இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இந்திய லெவன் அணியில் ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இடம் பிடித்திருந்தனர். காயத்தில் இருந்து மீண்ட பும்ரா, தவான் ஆகியோரும் திரும்பினர். ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், மனிஷ் பாண்டேவுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை அணியில் மேத்யூஸ் சேர்க்கப்படவில்லை.

ஆனால் ஆட்டம் தொடங்குவதற்குள் மழை குறுக்கிட்டது. ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. மூடப்பட்டிருந்த தார்ப்பாயில் சில இடங்களில் ஓட்டை இருந்ததால் அதன் வழியாக எப்படியோ மழை நீர் கசிந்து ஆடுகளத்திற்குள் (பிட்ச்) இறங்கி விட்டது.

இதனால் மழை ஓய்ந்ததும் ஆடுகளத்தை உலர வைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆடுகளத்தை காய வைக்க இஸ்திரி பெட்டி, ஹேர் டிரையர் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டன.

இன்னொரு பக்கம் குழுமியிருந்த ஏறக்குறைய 35 ஆயிரம் ரசிகர்கள் எப்படியும் போட்டி தொடங்கும், குறைந்தது 5 ஓவர்களாவது நடக்கும் என்று ஆவலோடு காத்திருந்தனர். செல்போன் லைட்டுகளை ஒளிர விட்டபடியும், வந்தே மாதரம் என்று கோஷமிட்டபடியும் உற்சாகப்படுத்தினர்.

இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகளத்தை காய வைக்க முடியவில்லை. அதிக ஈரப்பதம் இருந்ததால் வேறு வழியின்றி இரவு 9.45 மணிக்கு இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தோடு கலைந்து சென்றனர். அவர்கள் வாங்கிய டிக்கெட்டுக்குரிய பணம் இன்னொரு நாளில் திருப்பி கொடுக்கப்படும்.

இந்தியா-இலங்கை மோதும் 2-வது 20 ஓவர் போட்டி இந்தூரில் நாளை (செவ்வாய்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com