மும்பைக்கு எதிரான ஆட்டம்... சாஹல் விளையாடுவதில் சிக்கல் - காரணம் என்ன..?

கோப்புப்படம்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை அணிகள் மோத உள்ளன.
ஜெய்ப்பூர்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தின் முடிவு அவசியமாகும்.
தற்போது 16 புள்ளிகளுடன் உள்ள மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தினால் 18 புள்ளியை எட்டும். குஜராத்தை (18 புள்ளிகள்) விட ரன்ரேட்டில் வலுவாக இருப்பதால் மும்பைக்கு டாப்-2 இடம் உறுதியாகி விடும். தோற்றால் 4-வது இடத்திலேயே நீடிக்கும்.
அதேவேளை 17 புள்ளிகள் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தினால் அதன் புள்ளிகள் 19-ஆக உயரும். அப்போது அந்த அணிக்கு டாப்-2 இடங்கள் உறுதியாகும். இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் சீனியர் வீரரான யுஸ்வேந்திர சாஹல் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.
சாஹலுக்கு மணிக்கட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் அவர் டெல்லிக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. காயம் இன்னும் குணமடையாததால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவதிலும் சிக்கல் நிலவுகிறது.






