‘அடுத்த கட்ட பந்து வீச்சாளர்களை தயார்படுத்த வேண்டும்’ -கோலி

அடுத்த கட்ட பந்து வீச்சாளர்களை தயார்படுத்த வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
‘அடுத்த கட்ட பந்து வீச்சாளர்களை தயார்படுத்த வேண்டும்’ -கோலி
Published on

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை முழுமையாக (ஒயிட்வாஷ்) இழந்திருப்பது இதுவே முதல் முறையாகும். ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாக திகழ்ந்த போதிலும், நியூசிலாந்து பவுலர்கள் அளவுக்கு நமது பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதை சுட்டிகாட்டி இந்திய கேப்டன் விராட் கோலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணியில் இப்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. எனவே இதை கவனமாக பரிசீலித்து, இது தான் நிலைமை என்பதை ஏற்றுக் கொண்டு, விரைவில் திறமையான மாற்று பந்து வீச்சாளர்களை தயார்படுத்தி கொண்டு வர வேண்டும். சர்வதேச தரத்துக்கு சிறப்பாக பந்து வீசக்கூடிய 3-4 வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் திடீரென ஒன்றிரண்டு பவுலர்கள் விளையாட முடியாத சூழல் உருவானாலும், அந்த நெருக்கடியை சிக்கலின்றி சமாளிக்க முடியும். தொடர்ச்சியாக நிறைய போட்டிகள் இருக்கின்றன. அதனால் அவ்வப்போது சிறுசிறு மாற்றங்கள் தேவையாகும். இப்போது நவ்தீப் சைனி உருவாகி விட்டார். இந்த எதிர்கால திட்டத்திற்கு மேலும் 2-3 பவுலர்களை சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம். இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சமீப கால இந்திய அணியின் வெற்றியில் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்துள்ளது. பந்து வீச்சாளர்களின் தரநிலை தொடர்ந்து உயரிய நிலையில் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கோலி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com