உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முரளிதரன் புகழாரம்

தற்போதைய சூழலில், உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் திகழ்வதாக இலங்கை முன்னாள் வீரர் முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முரளிதரன் புகழாரம்
Published on

புதுடெல்லி,

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். இதையடுத்து அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 300 ஆக (54 டெஸ்ட்) உயர்ந்தது. இதன் மூலம் 300 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய பவுலர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த விக்கெட் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதே (அதாவது 600 விக்கெட்) எனது இலக்கு. அதை செய்ய முடியும் என்று நம்புவதாக அஸ்வின் கூறினார்.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடம் வகிக்கும் இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரன் (133 டெஸ்டில் 800 விக்கெட்) அஸ்வினின் சாதனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

புதிய மைல்கல்லை எட்டிய அஸ்வினை வாழ்த்துகிறேன். இது மிகப்பெரிய சாதனை. குறைந்த டெஸ்டில் 300 விக்கெட்டுகளை எடுப்பது எளிதான பணி அல்ல. உலக அரங்கில் தற்போது மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் விளங்குகிறார் என்பதில் மாற்று கருத்து இல்லை. சமீபகாலமாக அஸ்வின் ஒரு நாள் போட்டி அணியில் இடம் பெறவில்லை. ஒருநாள் போட்டிக்கும் அவர் திரும்பி, அதிலும் ஜொலிப்பார் என்று நம்புகிறேன்.

அவருக்கு இப்போது 31 வயது ஆகிறது. குறைந்தது அவரால் 4-5 ஆண்டுகள் இன்னும் விளையாட முடியும். ஆனால் அது தொடர்ந்து அவர் எப்படி செயல்படுகிறார், காயம் அடையாமல் இருப்பாரா என்பதை பொறுத்து தான் அமையும். அவரால் எவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். ஆனால் 35 வயதுக்கு பிறகு சாதிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

இந்தியா-இலங்கை இடையே அளவுக்கு அதிகமாக கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதாக நான் சொல்லமாட்டேன். ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுவதால் ஒரு வேளை கோலிக்கு இலங்கையுடன் மோதுவதில் சலிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

இந்தியா மிகச்சிறந்த அணி. மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. இலங்கை பலவீனமான அணி என்று சொல்லி, இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தை தட்டிப்பறித்து விட முடியாது. ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட்டிலும் உண்மையிலேயே இந்திய அணி அருமையாக விளையாடி வருகிறது.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை அணிக்கு எச்சரிக்கை மணி அடித்தாகி விட்டது. சில போட்டிகளில் தோற்கலாம். ஆனால் தற்போதைய இலங்கை அணி நிறைய போட்டிகளில் தோற்று கொண்டிருக்கிறது. இளம் கிரிக்கெட் வீரர்களும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவதில்லை. அவர்களும் திணறுகிறார்கள். இது தான் எங்கள் அணியில் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.
இவ்வாறு முரளிதரன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com