பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள திட்டம் உள்ளது - இங்கிலாந்து வீரர் சவால்

image courtesy:PTI
இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் இது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அத்துடன் ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி விளையாட போகிறது? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அவர்களின் இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியை ஜஸ்பிரித் பும்ரா முன்னின்று வழிநடத்த உள்ளார். இருப்பினும் அவரால் 5 போட்டிகளிலும் விளையாட முடியுமா? என்பது சந்தேகம்தான். இருப்பினும் அவர் விளையாடும் போட்டிகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள தம்மிடம் திட்டம் உள்ளதாக இங்கிலாந்து அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜேமி சுமித் சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நான் 7வது வரிசையில் களமிறங்குவதால் மற்ற வீரர்கள் முதலில் அவரை (பும்ரா) எதிர்கொள்வதை என்னால் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். எனவே அவரது பந்தை சந்திப்பதற்கு என்னிடம் திட்டங்கள் உள்ளன. அவர் நிச்சயமாக சவாலாக இருப்பார். நான் நன்றாக உணர்கிறேன். இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. அதில் இன்னும் நன்றாக தயாராவேன். இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு என்னால் புத்துணர்ச்சியுடன் செல்ல முடியும்" என்று கூறினார்.






