பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆடுகளத்தில் அதிக புற்கள் இருக்க வேண்டும் - பிட்ச் பராமரிப்பாளர் தல்ஜித் யோசனை

பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆடுகளத்தில் அதிக புற்கள் இருக்க வேண்டும் என்று பிட்ச் பராமரிப்பாளர் தல்ஜித் யோசனை தெரிவித்துள்ளார்.
பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆடுகளத்தில் அதிக புற்கள் இருக்க வேண்டும் - பிட்ச் பராமரிப்பாளர் தல்ஜித் யோசனை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆடுகளம் தயாரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து 22 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் ஆடுகள தயாரிப்பாளர் தல்ஜித் சிங் சில யோசனைகளை முன்வைத்துள்ளார். 77 வயதான தல்ஜித் கூறியதாவது:-

இந்த டெஸ்ட் போட்டியின் போது இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது தான் கவலைக்குரிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. பனிப்பொழிவை தடுப்பது நமது கையில் இல்லை. அவுட்பீல்டில் புற்கள் உயரமாக இருக்கும் போது, பனித்துளி அதன் மீது அதிக அளவில் படரும். பந்தும் எளிதில் ஈரமாகி விடும். இதை தவிர்க்கும் வகையில் அவுட்பீல்டில் உள்ள புற்களின் உயரத்தை குறைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். வழக்கமாக அவுட் பீல்டில் 7-8 மில்லிமீட்டர் உயரத்துக்கு புற்கள் இருக்கும். பகல்-இரவு டெஸ்டில் 6 மில்லிமீட்டர் அளவுக்கு குறைக்கலாம். இவ்வாறு செய்தால் பனிப்பொழிவின் பாதிப்பை வெகுவாக குறைக்கலாம். ஆனால் பனியை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) சீக்கிரமாகவே அழுக்காகி விடும். எனவே ஆடுகளத்தில் (பிட்ச்) தொடர்ந்து அதிகமான புற்கள் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். 2015-ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் (ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதிய ஆட்டம்) அவர்கள் 11 மில்லிமீட்டர் உயரத்துக்கு ஆடுகளத்தில் புற்களை விட்டு வைத்திருந்தனர். புற்களுடன் கூடிய ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு தல்ஜித் கூறினார்.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் ஆடுகள பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜீ கூறுகையில், பனிப்பொழிவை சமாளிக்க நிறைய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இரவு 8 அல்லது 8.30 மணியில் இருந்து நள்ளிரவு வரை பனிப்பொழிவு இருக்கும். ஆட்டத்தை முன்கூட்டியே தொடங்கினால் 8.30 மணிக்குள் முடித்து விடலாம். அப்போது பனிப்பிரச்சினை இருக்கவே இருக்காது என்றார்.

இதற்கிடையே பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்துவதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் எஸ்.ஜி. நிறுவனத்திடம் 72 இளஞ்சிவப்பு நிற பந்துக்கு ஆர்டர் செய்துள்ளது. அடுத்த வாரத்தில் அதை கிரிக்கெட் வாரியத்திற்கு சப்ளை செய்து விடுவோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com