இந்த 3 இளம் வீரர்கள் அடுத்த டி20 உலகக்கோப்பையில் இடம்பெறுவார்கள் - உத்தப்பா உறுதி

18-வது ஐ.பி.எல். தொடரில் பல இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
மும்பை,
சமீபத்தில் நிறைவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.
இந்த சீசனில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத (அன்கேப்டு) பல வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி சதமடித்து வரலாறு படைத்தார். மேலும் பஞ்சாப் அணியின் பிரம்சிம்ரன் சிங் பிரியன்ஷ் ஆர்யா, சென்னை அணியில் ஆயுஷ் மாத்ரே என பலர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி, பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா மூவரும் எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது உறுதி என்று முன்னாள் வீரர் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், வைபவ் சூர்யவன்ஷி, இவர்கள் அனைவரும் நிச்சயமாக உலகக் கோப்பை இடத்திற்கான போட்டியில் இருப்பார்கள். உங்களிடம் ஏற்கனவே சுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் உள்ளனர், அவர்கள் அனைவரும் டி20 போட்டிகளிலும் அசத்தக்கூடிய டெஸ்ட் வீரர்கள்.
அப்புறம் சஞ்சு சாம்சன் இருக்கிறார். எனவே யார் இடம் பெறுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருக்கும். இதில் உடற்தகுதி முக்கிய பங்கு வகிக்கும். உலகக்கோப்பைக்கு செல்லும்போது முழுமையாக உடற்தகுதி உள்ள அணியை நீங்கள் விரும்புகிறீர்கள், மேலும் தேர்வாளர்களும் நிர்வாகமும் அதை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.